வள்ளல் பெருமானும் - இரசவாதமும்
சித்தர்கள் சொன்ன இரசவாதம் பொய்யில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. சித்தர்களின் காலத்திற்குப்பின் வாழ்ந்த பலயோகிகளும், ஞானிகளும் இதனை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் வடலூர் வள்ளல் பெருமான் அவர்களது வாழ்வில் நடந்த மூன்று உண்மைச் சம்பவங்களை இங்கே எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
முதல் நிகழ்வு
1868 ஆம் ஆண்டில் வள்ளலார் அவர்கள் இரசவாத முறையில் தங்கம், வெள்ளி செய்ததற்கு அவர் எழுதிய கடிதமே ஆதாரமாக உள்ளது.
03.05.1868 ஆம் ஆண்டு சென்னை ஏழுகிணற்றுக்கு அடுத்துள்ள வீராசாமிப்பிள்ளைத்தெரு, கதவு எண். 38ல் வாழ்ந்துவந்த இறுக்கம் ஸ்ரீ இரத்தின முதலியார் அவர்களுக்கு வள்ளல் பெருமான எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இதுதான்.
'தற்காலம் வேண்டுவதை இதனடியில் எழுதுகின்றேன். அதாவது பொன்னுரைக்கின்ற உரைகல் ஒன்று, வெள்ளியுரைக்கின்ற உரைகல் ஒன்று, இவைகளையும் இவைகளுக்கு அடுத்த தராசு முதலிய கருவிகள் வைக்கின்ற பை ஒன்று, இம்மூன்றும் வாங்கி பங்கியில் அனுப்ப வேண்டும். சுமார் 5 பலம் 8 பலம் நிறுக்கத்தக்க தராசு நேரிட்டாலும் அதனுடன் அனுப்பவேண்டும்.
இதில் குறிப்பிட்ட பொருட்கள் வந்து சேர்ந்ததென்ற பொருள்படும்படியாக வள்ளலார் அவர்கள் மேற்கண்ட இறுக்கம் ஸ்ரீ இரத்தின முதலியார் அவர்களுக்கு 26.05.1868ல் அடுத்தொரு கடிதமும் எழுதியுள்ளார்.
இந்தக்கடிதங்கள் மூலமாக வள்ளல் பெருமான் தங்கம் செய்துள்ளார் என்பதை (எழுத்து ஆதாரம்) அறியமுடிகிறது. தங்கம் செய்வதற்காக அல்லாமல் வேறு பணிக்காக இவற்றை வள்ளல்பெருமான் வாங்கியிருக்க சூழல் இருந்ததாகத் தெரியவில்லை. இதுபற்றிய விவரம் திருமுகம் - கடிதம் எண். 36, 37ல் உள்ளன. வடலூர், வள்ளலாரின் தெய்நிலையம் வெளியிட்ட திருஅருட்பா உரைநடைப்பகுதியில் இக்குறிப்புகள் உள்ளன.
இதுவல்லாமல் மேலும் இரண்டு ஆதாரங்கள் திருஅருட்பிரகாச வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்சோதி அகவலில் உள்ளது.
வள்ளல் பெருமான் கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி என சித்திகளை மூன்றுவகையாகப் பிரிக்கிறார். அந்த மூன்றுவகை சித்திகளையும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தனக்கு முழுமையாக அளித்ததாகவும் அகவலில் எழுதியுள்ளார்.
'மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி' – அகவல் 240
இரசவாத்தில் உலோகங்களைக் காய்ச்சி, மூலிகைகளை அவற்றுடன் கூட்டி செயலாகச் செய்து தங்கமாக மாற்றுவது கருமசித்தியில் அடங்கும். அத்தகைய கருமசித்தியில் அடங்கும். அத்தகைய கருமசித்தியில் அடங்கியுள்ள பலகோடிகலைகளையும் (அதில் இரசவாதக் கலையும் அடங்கும்) அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தனக்கு அருளியதாக அகவலில் குறிப்பிட்டுள்ளார்.
கருமசித் திகளின் கலைபல கோடியும்
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி - அகவல் 242
இத்தகைய கருமசித்திக்காக இரசவாத செயலுக்காக வள்ளல் பெருமான் சென்னையிலிருந்து கருவிகள் வாங்கியதை கடித ஆதாரப் பூர்வமாக ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம்.
இரசவாதத்தை செயலாய் செய்து முடிப்பது கருமசித்தியில் அடங்கும். அதேசமயம் நினைத்த விநாடியில் ஒரு உலோகத்தை அதைவிட உயர்ந்த உலோகமாக மாற்றுவது யோகசித்தியில் அடங்கும். அத்தகைய யோகசித்தியையும் தனக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளியதாக அகவலில் குறிப்பிட்டுள்ளார்.
'யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி' – அகவல் 244
இவ்வாறு நினைத்த விநாடியில் சாதாரண உலோகத்தைத் தங்கமாக்குவது, மணலைத் தங்கமாக்குவது போன்ற யோகசித்த செயல்களை வள்ளலார் செய்ததை பின்வரும் உண்மைச்சம்பவம் மூலமாக நாம் அறியலாம்.
நிகழ்வு – 2
வள்ளல் பெருமான் வடலூரில் தங்கியிருந்த சமயம் ஒருமுறை அந்த ஊரைச் சேர்;ந்த ஒரு செல்வந்தர் வள்ளர் பெருமானைத் தனிமையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அந்த நபர் செல்வந்தராக இல்லாமல் தனது செல்வம் அனைத்தையும் இழந்து பல ஊர்கள் சுற்றி அலைந்துவிட்டு மீண்டும் வடலூர் வந்திருந்தார். வள்ளல் பெருமானின் சக்தியை, சித்தாற்றலை உணர்ந்த அவர் வள்ளல் பெருமானை சந்திக்க வந்திருந்தார்.
அந்த நபர் தான் இரசவாதத்தில் தங்கம் செய்ய ஆசைகொண்டு தனது சொத்து முழுவதையும் இழந்துவிட்டதாகவும், பல ஊர்கள் சுற்றி பலபேரை சந்தித்தும் தங்கம் செய்வது சாத்தியப்படவில்லை எனவும், கைப்பொருள் முழுவதையும் இழந்து விட்டதாகவும் கூறிவிட்டு
'இவ்வளவு சக்திபடைத்த நீங்கள் நிச்சயம் தங்கம் செய்யும் இரசவாத சித்தி பெற்றிருப்பீர்கள். எனவே தயவுசெய்து எனக்கு சொல்லித் தாருங்கள்' என்று கேட்க வள்ளலார் மறுத்துவிட்டார். அந்த நபரோ விடுவதாக இல்லை தொடர்ந்து நச்சரிக்கவே வள்ளல் பெருமான் நின்றிருந்த அந்த இடத்திலேயே குனிந்து மணலை ஒரு கைப்பிடி அள்ளி அந்த நபரின் கையினை விரிக்கச் சொல்லி மெல்ல கொட்டியிருக்கிறார்.
வள்ளல் பெருமான் தரையிலிருந்து அள்ளியபோது மணலாக இருந்தது அந்த நபரின் கையில் விழும்போது தங்கத்துகள்களாக விழுந்திருக்கின்றது. அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த அந்த நபர் 'ஐயா நான் நினைத்தது உண்மைதான் உங்களுக்கு அந்த இரசவாத சித்தி இருக்கிறது. தயவுசெய்து எனக்குக் கற்றுத்தாருங்கள்' என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அவருக்கு வள்ளல் பெருமான் சொன்ன தெளிவான பதில் ஒரு அற்புதமான வாக்கியமாகும் - அது
'இச்சையற்றோர்க்கே இது சித்திக்கும்' – என்பதுதான். இச்சையற்றோர்க்கே இது சித்திக்கும் என்று கூறிய வள்ளல் பெருமான், அந்த நபரைப் பார்;த்து 'போனது போகட்டும் இனி இதுபோன்ற செயலில் ஈடுபடாதீர்கள். இனிமேலாவது உழைத்து, ஏதேனும் தொழில் செய்து சம்பாதிக்கும் வழியினைப் பாருங்கள். இதுபோன்ற இரசவாத செயலில் ஈடுபட்டு எதையும் வீண் விரயம் செய்யாதீர்கள்' என்று உபதேசித்து அனுப்பியுள்ளார். அந்த நிகழ்ச்சி மூலம் வள்ளலார், மணலைத் தங்கமாக்கும் யோகசித்தி பெற்றிருந்தார் என்பது தெளிவாகிறது.
நிகழ்வு – 3
வடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மக்கள் வறுமையால் வாடியதைக் கண்டு வரந்திய வள்ளல் பெருமான் அம்மக்களுக்காக தருமசாலையை உருவாக்கினார். ஒரு சமயம் வள்ளல் பெருமானிடம் வந்த இரண்டு நபர்கள் தங்கள் குடும்பம் மிக ஏழ்மையில் உள்ளதாகவும் பிழைக்க ஏதேனும் வழிதாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது பரிவுகொண்ட வள்ளல்பெருமான் அவர்களுக்கு இரும்மை வெள்ளியாக்கும் முறையினை உபதேசம் செய்திருக்கிறார்.
சிலகாலம் கழித்து அந்த இருவரும் மீண்டும் வள்ளலாரிடம் வந்து ஐயா செலவு நிறைய உள்ளது இந்த வெள்ளியை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியவில்லை. எனவே இரும்பைத் தங்மாக்கும் முறையினை எங்களுக்கு சொல்லித்தாருங்கள் என்றனர். அவர்களின் பேராசையைக் கண்ட வள்ளலார் 'அதுவும் போகும் போங்கள்' என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டாராம். அதன்பின் அந்த இருவராளும் இரும்பை வெள்ளியாக்க முடியவில்லையாம். அந்த சக்தியை அவர்கள் இழந்துவிட்டார்களாம்.
இந்த நிகழ்வு மூலம் ஒரு சாதாரண உலோகத்தை வேறு ஒரு உயர்வான உலோகமாக மாற்றும் ஆற்றலை வள்ளலார் பெற்றிருந்தார் என்பதும், அந்;த ஆற்றலை விநாடியில் ஒருவருக்குக் கொடுக்கவும், திரும்பப் பெறவும் வள்ளலாரால் முடிந்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது.
இந்த நிகழ்வில் ஒவ்வொருவரும் நன்கு கவனித்து மனத்தில் பதிக்கவேண்டிய ஒன்று வள்ளல் பெருமான் கூறிய 'இச்சையற்றோர்க்கே இது சித்திக்கும்' என்ற வாக்கியம்தான். இது மனத்தில் பதிந்துவிட்டாhல், தேவையில்லாமல் எவரும் அலைந்து திரியவோ, பொருளை வீணே செலவு செய்யவோ மாட்டார்கள்.
உண்மையிலேயே இரசவாத சித்திபெற்றவர். அதனை மற்றவர்க்கு செய்து காட்டிய உயர்ந்தஞானி. எல்லா உயிர்களிடத்தும் அன்புள்ளம் கொண்டவருமான வள்ளல் பெருமானின் இந்த வாக்கினை மதித்து நடக்க வேண்டியது இரசவாத சித்திக்காக முயல்பவர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். மீறி நடப்பது அவரவர் விதியாகும்.
வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – அகவல் 280
1 கருத்து:
நல்ல தகவல் .நன்றி
கருத்துரையிடுக