ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்


பூண்டி மகான் தங்கம் செய்தார்

வடஆற்காடு மாவட்டத்தில் போளுர் தாலுகாவில் உள்ளது பூண்டி என்னும் சிறிய கிராமம். அங்கு வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தியவர் பூண்டிமகான் ஆவார். இவர் எப்போதும் ஆனந்த நிலையிலேயே காணப்படுவார். ஒருநாள் இம்மகான் அவ்வூரில் உள்ள செய்யாற்றின் கரையோரம் சமாதியில் ஆழ்ந்திருந்தபோது ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
இதனைக்கண்ட கிராமமக்கள் ஒரு மூங்கில் கூடை மூலம் மகானைக் காப்பாற்ற முயன்றார்கள். வெள்ளம் மேலம் தீவிரமாகவே மூங்கில்கூடையுடன் மகானை வெள்ளம் இழுத்துச் செல்ல, மக்கள் மட்டும் தப்பினர். சிலநாள் கழித்து வெள்ளநீர் வடிந்தபோது ஓரிடத்தில் அந்த மூங்கில்கூடை தெரியவே கிராமமக்கள் சென்று பார்த்தபோது மகான் எப்போதும் போல சமாதிநிலையில் இருந்தார். அவருக்கு எந்த பாதிப்பும் இல் 
லை. உடலினை பல துண்டுகளாக பிரித்து மீண்டும் ஒன்றாக்கிக் கொள்ளக்கூடிய நவகண்டயோகம் எனும் அற்புத சித்தியும் படைத்தவர் பூண்டி மகான்.

ஒருமுறை மகானிடம் மதிப்பும், மரியாதையும் கொண்ட ஒரு பக்தர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லையெனக்கூறி தன்மகளின் திருமணம் நல்லபடி நடக்க ஆசி வழங்கும்படி கேட்க, மகானோ 'கவலைப்படாதே, எல்லாம் நல்லபடி நடக்கும். உனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள விவசாயிடம் பழைய தேய்ந்த கொலுவு ஒன்று வாங்கிவா' என்றார். கொலுவு என்பது ஏர் கலப்பையின் கீழே அமைக்கப்படும் இரும்பாலான நிலத்தைத் தோண்ட உதவும் கருவியாகும். 

இது தேயத்தேய சிறிதுசிறிதாக கீழே இறக்கி அமைப்பார்கள். அதிகம் தேய்மானமாகிவிட்டால் அதனை எடுத்துவிட்டு, வேறு புதிதாக அமைத்திடுவார்கள். பழையது எதற்கும் உதவாது. பழைய இரும்பென எடைக்குப்போட மட்டுமே பயன்படும். அத்தகைய கொலுவு ஒன்றை வாங்கிவரும்படி பூண்டிமகான் சொன்னார். அந்த பக்தரும் அதேபோல அவ்விவசாயியிடம் கொலுவு ஒன்றை கேட்டு வாங்கிவந்து மகானிடம் தந்தார். அந்த இரும்பு கொலுவை வாங்கிய மகான் அதனை சிலதடவைகள் தனது கையினால் தடவிட அந்த இரும்புகொலுவு தங்கமாக மாறியது. 'இதனை விற்று உனது மகளின் திருமணத்தை நல்லபடி நடத்து போ' எனக் கூறி மகான் அனுப்பிவைத்தார்.

பூண்டி மகான் அவர்கள் செய்த எத்தனையோ அற்புதங்களில் இதுவும் ஒன்றாகும். கையால் தொட்டு, தனது யோகசக்தியின் மூலம் இரும்பைத் தங்கமாக மாற்றுவது வள்ளலார் குறிப்பிட்டதுபோல யோகசித்தி வகையைச் சார்ந்ததாகும். நினைத்த நேரத்தில் ஒரு சாதாரண உலோகத்தை உயர்ந்த (தங்க) உலோகமாக மாற்றும் அற்புத சித்தியினை பூண்டிமகான் பெற்றிருந்தார்.

அவர் அந்த சித்தியினைத் தன்சுய நலத்துக்காகப் பயன்படுத்தாமல், பிறர் நலனுக்காக மட்டும் பயன்படுத்தி வந்தார். சூட்சும உடலில் இன்றும் வாழ்ந்துவரும் பூண்டி மகானை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் அவர் அருள் செய்வார். உங்களுக்கும் தங்கம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: