சனி, 14 மே, 2011

சகுனம் சூட்சுமம்


ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து,ராசிக்கல் மோதிரம் என எத்தனை வகைகளில் பிரித்து ஜோதிடம் சொன்னாலும் நம் பெரியோர்களின் சகுன சாஸ்திரம் பார்த்து கணிக்கும் கணிப்பு இவைகளுக்கு ஈடாகுமா...? ஆனால் இன்று பெரியோர்கள் ஃபேஸ்புக்,டிவிட்டர் என பிஸியாகிவிட்டார்கள்...கிராமங்களில் இன்று சகுனத்தையே அதிகம் நம்புகிறார்கள்.நல்ல காரியத்தை பத்தி பேசும்போது தும்முனான் ஒருத்தன் அப்பவே நினைச்சேன் இப்படி நடக்கும்னு என பேசிக்கொள்வார்கள்.காலையில வெளியே போகும்போதே சகுனம் சரியில்லை..அதே மாதிரியே இன்னிக்கு நஷ்டகணக்குதான் ஆச்சு..என்றும்பேசிக்கொள்வார்கள்,


பொண்ணு பார்க்க போனோம்..போற வழியில பாம்பு பார்த்தோம்...அதனால் வழித்த்டம் சரியில்லை என பல கல்யாணங்கள் கிராமப்புறங்களில் நின்றும் போயிருக்கின்றன...இந்த தகவலை பெண் வீட்டாருக்கு சொல்ல,வழித்தடம் சரியில்லை..அதனால் இந்த சம்பந்தம் வேண்டாம் என நினைக்கிறோம்...என ஒரு கடிதம் எழுதிவிட்டு கேன்சல் செய்துவிடுவார்கள்..பெண் வீட்டாரும் இதை புரிந்து கொண்டு விடுவார்கள்.பல வேறு காரணங்களுக்கும் பொய்யாக இந்த காரணத்தை சொல்வதும் உண்டு...வழித்தடம் சரியில்லை என சொல்லிவிட்டால் ஒன்றும் கேள்வி கேட்க முடியாது இப்படியொரு எழுதப்படாத ஒப்பந்தம் இன்றும் கிராமங்களில் உண்டு.

எங்கள் கிராமத்தில் என் அத்தையை பெண் பார்க்க வந்த கதை பற்றி எங்கள் பாட்டி சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது...கரூர் அருகில் காவிரி,அமராவதி என இரு ஆறுகளும் கூடும் இடத்தில்,ஆற்றின் ஓரம் இருக்கும் சிறு கிராமம் அது..அத்தையை பெண் பார்க்க வந்தார்கள்.மாப்பிள்ளை வீட்டார் வந்து போனதும்,வீட்டில் இருந்த வளர்ப்பு பூனை உத்திரத்தில் தூங்கியது,அப்படியே தூக்க கலக்கத்தில் தரையில் விழுந்து இறந்து போனது..அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.அதே மாதத்தில் அது 1970 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்..அமராவதி ஆற்றில் பெரு வெள்ளம் வந்து,இவர்களது வயல்வெளிகள் நாசமானது..அந்த நஷ்டத்திலிருந்து மீள ஒரு வருசம் ஆனது.அப்போதும் திருமணத்தை ஒரு வருடம் தள்ளிப்போட்டார்களே ஒழிய நிறுத்தவில்லை..நல்ல சம்பந்தம்.அரசாங்க வேலை.விட வேண்டாம் என திருமணத்தை முடித்தார்கள்.திருமணத்திற்கு பின் என் அத்தை பட்ட கஷ்டங்கள் ரொம்ப கொடுமை.அவருக்கு எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தன.நகையை சூதாடி அழித்தார்.மாமியார் வீட்டில் திருடினார்.வீட்டுக்கு வராமல் 6 மாதம் தலைமறைவாக இருந்தார்.இதனால் என் அத்தை பிறந்த வீட்டிற்கே வர வேண்டியதாயிற்று.

பெண் பார்த்து விட்டு போனதும் வீட்டுப்பூனை இறந்தது,வெள்ளத்தால் பயிர் நாசம் இவையெல்லாம் சகுனங்களே..இயற்கை இவர்களுக்கு இந்த சம்பந்தம் வேண்டாம் என உணர்த்தியது.

நமக்கு வரும் துன்பங்களை இயற்கையே முன்கூட்டி உணர்த்தும்.அதை தெய்வமாகவும் நினைக்கலாம்..முன்னோர்கள் வழிகாட்டுவதாகவும் எண்ணலாம்...சகுனம் என்றும் சொல்லலாம்...

கருத்துகள் இல்லை: