புதன், 19 ஆகஸ்ட், 2015

ஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதிக்கும்,சென்னை பெண்

வாட்ஸ் அப் பில் படித்த நெகிழ வைக்கும் உண்மை கதை..உங்களுக்கும் பிடிக்கும் என பகிர்கிறேன்..!!

ஐம்பது பைசாவிலிருந்து தினசரி வருமானத்தை இரண்டு லட்சமாக மாற்றி, சோதனைகளை வென்று சாதனை படைத்த தமிழ்ப் பெண்மணி!!!!!!!

சென்னையில் ஒரு நடுத்தர கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பேட்ரிசியா தாமஸ் தன் 17வது வயதில், நாராயண் என்ற இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்த போது படுகுழியில் விழப் போகிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை. கல்லூரியில் படிக்க ஆரம்பித்த காலம் அது.  ஓட்டலில் வேலை செய்யும் 30 வயது இளைஞனைக் காதலித்து பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொள்ளும் போது அது பெரிய சாதனை. இரண்டு குடும்பத்தினரும் அத்திருமணத்தை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் இருவரும் அதைப் பொருட்படுத்தவில்லை.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவர் நாராயண் குடி மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அறிய நேர்ந்த பேட்ரிசியாவிற்கு ஒரு கனவுலகம் கலைந்து போனது. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் கர்ப்பமாகி விட்டிருந்தார். கணவர் போதைக்காகப் பணம் கேட்டு அவரைச் சித்திரவதை செய்ய ஆரம்பித்த போது வாழ்க்கை நரகமாக ஆரம்பித்தது. படிப்போ முடியவில்லை. எனவே படிப்பு சார்ந்த வேலைக்கு வழியில்லை. ஏதாவது தொழில் செய்யலாம் என்றாலோ எதிலும் அனுபவம் இல்லை. கைவசம் பணமும் இல்லை. கணவர் திருந்துவார் என்ற நம்பிக்கை சிறிது சிறிதாகக் குறைந்து கடைசியில் முழுவதும் வரண்டு போன போது பேட்ரிசியா இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தார்.

பேட்ரிசியாவின் பெற்றோர் இருவரும் நல்ல உத்தியோகத்தில் இருந்தார்கள். மகள் தங்களுக்குத் தெரியாமல் ரகசியக் கல்யாணம் செய்ததை மன்னிக்காத அவர்கள் மகள் நிலைமை தெரிய வந்த போது வருத்தப்பட்டார்கள். பேட்ரிசியா தன் பெற்றோருக்குப் பாரமாக விரும்பவில்லை. தன் குழந்தைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தைத் தர வேண்டும், தன் முட்டாள்தனத்தின் விளைவாக அவர்கள் வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு விடக் கூடாது என்ற எண்ணம் உறுதியாக அவரிடம் மேலோங்கி இருந்தது. என்ன செய்வது என்று நிறைய சிந்தித்தார்.

பேட்ரிசியாவிற்கு சமையலில் மிகுந்த ஆர்வமும் திறமையும் இருந்தது. எனவே அதை வைத்து வருமானம் ஈட்டலாம் என்ற முடிவுக்கு வந்தார். அவருடைய தந்தையின் நண்பர் ஒருவர் தள்ளுவண்டி ஒன்றை அவருக்கு இலவசமாகத் தந்தார். பேட்ரிசியா நாராயண் வீடு சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அண்ணா சதுக்கத்தில் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் விற்கத் தீர்மானித்தார். அதற்காக அரசு பொதுப்பணித் துறையிடம் அனுமதி வாங்க அவர் கைக்குழந்தையுடன் பல முறை அந்த அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது.

ஒருவழியாக அனுமதி பெற்று, தாயாரிடம் சில நூறு ரூபாய்கள் கடன் வாங்கி கட்லெட், சமோசா, பஜ்ஜி, போண்டா, டீ, காபி தாயாரித்து தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் விற்கப் போன போது முதல் நாளில் (1982 ஆம் ஆண்டில் ஒரு நாள்) ஒரு காபி மட்டுமே 0.50 பைசாவிற்கு விற்பனை செய்ய முடிந்தது.

பேட்ரிசியா மனம் உடைந்து போனார். இந்த ஐம்பது பைசாவுக்கா இத்தனை பாடு என்று தாயாரிடம் கண்ணீர் விட்டு அவர் அழுத போது தாயார் அவருக்கு ஆறுதல் கூறினார். மறுநாளும் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் வைத்துக் கொண்டு மீண்டும் அதே இடத்திற்கு விற்பனைக்குப் போன அவர் நூறு ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்து விட்டு வீடு திரும்பினார். அவர் மனதில் ஓரளவு நம்பிக்கை பிறந்தது. போகப் போக விற்பனை அதிகரித்து வந்தது. அவர் தயாரித்த தின்பண்டங்கள் ருசியிலும், தரத்திலும் தொடர்ந்து நன்றாக இருக்கவே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. மதியம் மூன்று மணி முதல் இரவு பதினோரு மணி வரை விற்பனை செய்து விற்பனை நன்றாக சூடுபிடிக்கவே காலை ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரையும் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

தொடர்ந்த வருடங்களில் பேங்க் ஆஃப் மதுரா உட்பட சில இடங்களில் கேண்டீன் வைக்க அவருக்கு அழைப்பு வந்தது. வந்த வாய்ப்பு எதையும் வேலைப்பளு அதிகம் என்று நினைத்து அவர் நழுவ விட்டதில்லை. ஆட்களை வேலைக்கு வைத்து எல்லாவற்றையும் திறம்பட நடத்தினார். பண வருவாய் அதிகரித்து வந்தது. மகனும் மகளும் நன்கு படித்தார்கள். கணவர் மட்டும் மாறவில்லை. அவருடைய துன்புறுத்தல் அதிகமாகவே இருந்தது.

ஒரு நாள் அப்படி அவர் பேட்ரிசியாவின் விற்பனை இடத்திற்கே வந்து தொந்திரவு செய்யவே அவரிடம் இருந்து தப்பிக்க வெளியே வந்து ஒரு பஸ்ஸில் ஏறிய அவர் National Institute of Port Management என்ற மத்திய அரசு கல்விக்கூடம் அருகே இறங்கினார். ஏன் இங்கே போய் கேண்டீன் நடத்த அனுமதி கேட்கக் கூடாது என்று தோன்றவே அங்கு போய் கேட்டார். அங்கு அது வரை கேண்டீன் நடத்திய ஆட்கள் மீது அவர்களுக்கு அதிருப்தி இருக்கவே அவர்கள் இவரைப் பற்றி விசாரித்து விட்டு அனுமதி அளித்தனர். உடனடியாக பேட்ரிசியா நாராயண் அங்கே கேண்டீன் ஆரம்பித்தார். முதல் வாரம் அந்த நிர்வாகத்தில் இருந்து ரூ.80000/- கிடைத்த போது அவருக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது. இப்படி தினசரி குடும்பப் பிரச்சினைகளை அவர் சந்தித்து வந்த போதிலும் வியாபார முன்னேற்றம் குறித்த சிந்தனை அவரிடம் எல்லா நேரங்களிலும் இருந்து வந்தது.

2002ல் அவர் கணவர் இறந்தார். அந்த சமயத்தில் தள்ளுவண்டியில் அதிகபட்சமாக ரூ.25000/- வரை தினமும் பேட்ரிசியா சம்பாதிக்க ஆரம்பித்திருந்தார். பின் சங்கீதா ஓட்டல் க்ரூப்புடன் சேர்ந்து சில உணவகங்கள் ஆரம்பித்தார். பின் தொழிலில் அவர் திரும்பிப்பார்க்க வேண்டி இருக்கவில்லை.

ஆனாலும் விதி மீண்டும் அவர் வாழ்வில் விளையாடியது. அவர் மகள் தன் கணவனுடன் காரில் வந்து கொண்டிருக்கையில் விபத்திற்குள்ளாகி கணவனுடன் அந்த இடத்திலேயே காலமானார். விபத்துக்கு சற்று முன் தான் தாயாரிடம் பேசி பிரியாணியும் பாயாசமும் தயார் செய்து வைக்கச் சொல்லி இருந்தார். சாப்பிட மகள் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த தாயாரிற்கு மகளின் பிணம் வந்து சேர்ந்தது எப்படி இருந்திருக்கும்?

அந்த இடத்தில் (அச்சரப்பாக்கம்) இருந்து ஆம்புலன்ஸ் வசதி சரியாக இல்லை என்பதால் ஒரு இலவச ஆம்புலன்ஸை இன்றும் இயக்கி வரும் பேட்ரிசியா, மகள் மறைவிற்குப் பிறகு ஒரு வருடம் விரக்தியில் எதிலும் ஈடுபடாமல் தனிமையில் துக்கத்தில் மூழ்கிக் கிடந்தார். அவர் மகன் அந்த நேரத்தில் வியாபாரத்தைத் திறம்பட நடத்தி வந்தான். பின் மெள்ள பேட்ரிசியா நாராயண் துக்கத்தில் இருந்து மீண்டு வந்தார். மகள் பெயரில் ‘சந்தீபா’ என்ற ஓட்டலை ஆரம்பித்தார். பின் அந்த ஓட்டலின் பல கிளைகள் சென்னை நகரத்தில் அவரால் ஆரம்பிக்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டில் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு அவரைச் சிறந்த வணிகப் பெண்மணியாகத் தேர்ந்தெடுத்தது. 2010ல் அவருடைய ஒரு நாளைய வருமானம் ரூ.200000/-

ஐம்பது பைசாவில் இருந்து இரண்டு லட்சமாக தினசரி வருமானம் உயர்த்தி வந்திருக்கிற அவர் தனது தொழில் பள்ளியாக மெரினா கடற்கரையையே கூறுகிறார். தெருவில் கற்கிற பாடங்கள் என்றுமே வலிமை உடையவை அல்லவா? தயாரிப்பின் தரத்தில் என்றுமே கவனமாய் இருந்ததும், உழைப்பிற்கும், புதிய முயற்சிகளுக்கும் பின் வாங்காமல் இருந்ததும் அவருடைய வெற்றி ரகசியங்கள்.

கருத்துகள் இல்லை: