செவ்வாய், 4 செப்டம்பர், 2012

உங்க ஜாதகத்துல சனி எங்க இருக்கு? ராசிபலன்


ஜோதிடம்;ஜாதகத்தில் சனியின் நிலை

லக்னத்தில் சனிபகவான் இருக்கப் பிறந்தவர் பல கலைகளையும் கற்றுணர்வார். ரூபவான், துர்ப்புத்தியுள்ளவர் என்றும் பெயர் எடுக்கக்கூடும். வாத சரீரமுள்ளவர். தீர்க்காயுள் உடையவர். ஞானமுள்ளவர். உற்சாகமாக காலங்கழிப்பவர்.
இரண்டாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் செல்வம் உடையவர். ஆயுள் விருத்தியில்லாதவர். இரண்டு விவாகங்கள் செய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளவர். ஏதாவது விசாரத்தால் பாதிக்கப்படுபவர்.
மூன்றாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர். தாசிகள் லோலர், கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்பவர். சேவகா விருத்தியு;ளளவர். தன் தான்ய விருத்தியுள்ளவர். ஆனால் சகோதர விருத்தியில்லாதவர். சுகவான் என்றும் கூறலாம்.
நான்காவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் சகோதர பாக்கியம் உள்ளவர். பெரியோர் சேர்க்கையுள்ளவர். சரீர புஷ்டியுள்ளவர். வாஹன பிராப்தியுள்ளவர். மித்ர பேதம் செய்வதில் பின் வாங்க மாட்டார்.
ஐந்தாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் தர்ம சிந்தனையுள்ளவர். விரோதிகளை எளிதி; ஜெயிப்பவர். புத்ர பாக்கியம் அதிகம் இல்லாதவர். பெரியோர்களுடைய விரோதத்தைச் சம்பாதிப்பவர்.
ஆறாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் புத்திமான், பரிசுத்தார். சத்ருக்களை எளிதில் வெல்பவர். செல்வங்கள் சேர்ப்பவர். அற்பமான வியாதிகள் உள்ளனர்.
ஏழாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் தேச சஞ்சாரம் செய்பவர். களத்ர ஹானியுள்ளவர். வேசிகள் சகவாசம் உள்ளவர். இரண்டு மனைவியர் பிராப்தியுள்ளவர். ஸ்திரீகளின் விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம்.
எட்டாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் கண் சம்பந்தமான வியாதியுள்ளவர். கீழ் ஜாதிப் பெண்களின் இன்ப நுகர்ச்சியுள்ளவர். புத்திரர்கள் அதிகமில்லாதவர். தீர்க்காயுள் உண்டு. ஆனால் உத்தியோகத்தில் நிலைத்து இருக்காத நிலை உண்டாகும். தரித்திரத்தில் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஓன்பதாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் பெற்ற தாயாருக்குப் பீஐட மனைவி பாக்கியம் உள்ளவர். திருப்பணிகள் செய்வதில் ஆசையுள்ளவர்.

பத்தாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் குருபக்தியில் சிறந்தவர். கிராமாதிகாரம் வகிப்பவர். பிறந்த ஊரை விட்டு தூரதேசத்தில் உத்தியோகம் செய்பவர். புத்திமான் என்று பலரால் போற்றப்படுவார்.

பதினோராவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் அல்ப வித்தையுள்ளவரான போதிலும் ராஜபூஜித் என்று சொல்லலாம். புத்தி கூர்மையுள்ளவர். தானிய விருத்தியுள்ளவர். பூமிகளைச் சேர்த்து லாபம் அடைபவர், போக பாக்கியங்களை அனுபவிப்பவர்.

பன்னிரெண்டாவது இடத்தில் சனி இருக்கப் பிறந்தவர் எடுத்த காரியத்தை முடிக்கும் ஆர்வம் உள்ளவர். விஷப் பார்iவுயுள்ளவர். லோபியென்று பலர் தூற்றும் குணங்கள் உள்ளவர். மனைவி தோஷம் உள்ளவர்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

தங்கம் வாங்க காலப்பிரகாசிகை சொல்லும் நல்ல நேரம்


தங்கம் வாங்குவதற்குகந்த காலம்

குரு வர்கோத்தமம் பெற்றிருக்க புதனும், சுக்ரனும் கேந்திரத்திலிருக்கும்படியான லக்னத்தில் தங்கத்தை வாங்கிச் சேர்த்தால் ஒன்று கோடி மடங்காக வளர்ச்சியுறும்.
இதுபோலவே சந்திரன் தன் உச்ச அம்சமான லக்னத்தில் இருக்க, அதற்கு ஏழாமிடத்தில் குருவும் இருக்க செல்வங்களைச் சேமித்தால் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், ஆபரணங்கள் முதலானவை ஒன்றுக்குப் பலமடங்காகப் பெருகும்.
தங்கம், தான்யங்கள், ரத்னம் இவைகளைச் சேமிக்கும் விஷயத்திலும், சம்பாதிக்கும் விஷயத்திலும் லக்னத்தில் குரு இருந்தால் மேன்மேலும் விருத்தியாகும்.
லக்னத்தில் குருவும், இரண்டாமிடத்தில் சுக்ரனும், பத்தாமிடத்தில் சந்திரனும், பதினொன்றாம் இடத்தில் புதனும் இருந்து, அப்படிப்பட்ட நேரத்தில் செல்வத்தினைச் சேமிப்பது நல்லது. குறைவற்றிருக்கும்.
வியாழக்கிழமை தினம், லக்னத்தில் குருவும், 11ல் சூர்யனும், 6ல் சனியும் இருந்தால் அதுசமயம் பணியாட்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். பொருள்களையும் சேமிக்கவேண்டும்.
லக்னத்தில் சுக்ரனும், 10ம் இடத்தில் குருவும், சந்திரனும் இருக்க, ஈயம், பித்தளை, வெண்கலம் ஆகியவற்றை வாங்கிச் சேமித்தால் ஒன்று கோடி (பல) மடங்காகும்.

பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்


பூண்டி மகான் தங்கம் செய்தார்

வடஆற்காடு மாவட்டத்தில் போளுர் தாலுகாவில் உள்ளது பூண்டி என்னும் சிறிய கிராமம். அங்கு வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தியவர் பூண்டிமகான் ஆவார். இவர் எப்போதும் ஆனந்த நிலையிலேயே காணப்படுவார். ஒருநாள் இம்மகான் அவ்வூரில் உள்ள செய்யாற்றின் கரையோரம் சமாதியில் ஆழ்ந்திருந்தபோது ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
இதனைக்கண்ட கிராமமக்கள் ஒரு மூங்கில் கூடை மூலம் மகானைக் காப்பாற்ற முயன்றார்கள். வெள்ளம் மேலம் தீவிரமாகவே மூங்கில்கூடையுடன் மகானை வெள்ளம் இழுத்துச் செல்ல, மக்கள் மட்டும் தப்பினர். சிலநாள் கழித்து வெள்ளநீர் வடிந்தபோது ஓரிடத்தில் அந்த மூங்கில்கூடை தெரியவே கிராமமக்கள் சென்று பார்த்தபோது மகான் எப்போதும் போல சமாதிநிலையில் இருந்தார். அவருக்கு எந்த பாதிப்பும் இல் 
லை. உடலினை பல துண்டுகளாக பிரித்து மீண்டும் ஒன்றாக்கிக் கொள்ளக்கூடிய நவகண்டயோகம் எனும் அற்புத சித்தியும் படைத்தவர் பூண்டி மகான்.

ஒருமுறை மகானிடம் மதிப்பும், மரியாதையும் கொண்ட ஒரு பக்தர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லையெனக்கூறி தன்மகளின் திருமணம் நல்லபடி நடக்க ஆசி வழங்கும்படி கேட்க, மகானோ 'கவலைப்படாதே, எல்லாம் நல்லபடி நடக்கும். உனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள விவசாயிடம் பழைய தேய்ந்த கொலுவு ஒன்று வாங்கிவா' என்றார். கொலுவு என்பது ஏர் கலப்பையின் கீழே அமைக்கப்படும் இரும்பாலான நிலத்தைத் தோண்ட உதவும் கருவியாகும். 

இது தேயத்தேய சிறிதுசிறிதாக கீழே இறக்கி அமைப்பார்கள். அதிகம் தேய்மானமாகிவிட்டால் அதனை எடுத்துவிட்டு, வேறு புதிதாக அமைத்திடுவார்கள். பழையது எதற்கும் உதவாது. பழைய இரும்பென எடைக்குப்போட மட்டுமே பயன்படும். அத்தகைய கொலுவு ஒன்றை வாங்கிவரும்படி பூண்டிமகான் சொன்னார். அந்த பக்தரும் அதேபோல அவ்விவசாயியிடம் கொலுவு ஒன்றை கேட்டு வாங்கிவந்து மகானிடம் தந்தார். அந்த இரும்பு கொலுவை வாங்கிய மகான் அதனை சிலதடவைகள் தனது கையினால் தடவிட அந்த இரும்புகொலுவு தங்கமாக மாறியது. 'இதனை விற்று உனது மகளின் திருமணத்தை நல்லபடி நடத்து போ' எனக் கூறி மகான் அனுப்பிவைத்தார்.

பூண்டி மகான் அவர்கள் செய்த எத்தனையோ அற்புதங்களில் இதுவும் ஒன்றாகும். கையால் தொட்டு, தனது யோகசக்தியின் மூலம் இரும்பைத் தங்கமாக மாற்றுவது வள்ளலார் குறிப்பிட்டதுபோல யோகசித்தி வகையைச் சார்ந்ததாகும். நினைத்த நேரத்தில் ஒரு சாதாரண உலோகத்தை உயர்ந்த (தங்க) உலோகமாக மாற்றும் அற்புத சித்தியினை பூண்டிமகான் பெற்றிருந்தார்.

அவர் அந்த சித்தியினைத் தன்சுய நலத்துக்காகப் பயன்படுத்தாமல், பிறர் நலனுக்காக மட்டும் பயன்படுத்தி வந்தார். சூட்சும உடலில் இன்றும் வாழ்ந்துவரும் பூண்டி மகானை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் அவர் அருள் செய்வார். உங்களுக்கும் தங்கம் கிடைக்கும்.

சனி, 1 செப்டம்பர், 2012

வடலூர் வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்


வள்ளல் பெருமானும் - இரசவாதமும்

சித்தர்கள் சொன்ன இரசவாதம் பொய்யில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. சித்தர்களின் காலத்திற்குப்பின் வாழ்ந்த பலயோகிகளும், ஞானிகளும் இதனை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் வடலூர் வள்ளல் பெருமான் அவர்களது வாழ்வில் நடந்த மூன்று உண்மைச் சம்பவங்களை இங்கே எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

முதல் நிகழ்வு

1868 ஆம் ஆண்டில் வள்ளலார் அவர்கள் இரசவாத முறையில் தங்கம், வெள்ளி செய்ததற்கு அவர் எழுதிய கடிதமே ஆதாரமாக உள்ளது.

03.05.1868 ஆம் ஆண்டு சென்னை ஏழுகிணற்றுக்கு அடுத்துள்ள வீராசாமிப்பிள்ளைத்தெரு, கதவு எண். 38ல் வாழ்ந்துவந்த இறுக்கம் ஸ்ரீ இரத்தின முதலியார் அவர்களுக்கு வள்ளல் பெருமான எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இதுதான்.

'தற்காலம் வேண்டுவதை இதனடியில் எழுதுகின்றேன். அதாவது பொன்னுரைக்கின்ற உரைகல் ஒன்று, வெள்ளியுரைக்கின்ற உரைகல் ஒன்று, இவைகளையும் இவைகளுக்கு அடுத்த தராசு முதலிய கருவிகள் வைக்கின்ற பை ஒன்று, இம்மூன்றும் வாங்கி பங்கியில் அனுப்ப வேண்டும். சுமார் 5 பலம் 8 பலம் நிறுக்கத்தக்க தராசு நேரிட்டாலும் அதனுடன் அனுப்பவேண்டும்.

இதில் குறிப்பிட்ட பொருட்கள் வந்து சேர்ந்ததென்ற பொருள்படும்படியாக வள்ளலார் அவர்கள் மேற்கண்ட இறுக்கம் ஸ்ரீ இரத்தின முதலியார் அவர்களுக்கு 26.05.1868ல் அடுத்தொரு கடிதமும் எழுதியுள்ளார்.

இந்தக்கடிதங்கள் மூலமாக வள்ளல் பெருமான் தங்கம் செய்துள்ளார் என்பதை (எழுத்து ஆதாரம்) அறியமுடிகிறது. தங்கம் செய்வதற்காக அல்லாமல் வேறு பணிக்காக இவற்றை வள்ளல்பெருமான் வாங்கியிருக்க சூழல் இருந்ததாகத் தெரியவில்லை. இதுபற்றிய விவரம் திருமுகம் - கடிதம் எண். 36, 37ல் உள்ளன. வடலூர், வள்ளலாரின் தெய்நிலையம் வெளியிட்ட திருஅருட்பா உரைநடைப்பகுதியில் இக்குறிப்புகள் உள்ளன.

இதுவல்லாமல் மேலும் இரண்டு ஆதாரங்கள் திருஅருட்பிரகாச வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்சோதி அகவலில் உள்ளது.

வள்ளல் பெருமான் கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி என சித்திகளை மூன்றுவகையாகப் பிரிக்கிறார். அந்த மூன்றுவகை சித்திகளையும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தனக்கு முழுமையாக அளித்ததாகவும் அகவலில் எழுதியுள்ளார்.

'மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி' – அகவல் 240

இரசவாத்தில் உலோகங்களைக் காய்ச்சி, மூலிகைகளை அவற்றுடன் கூட்டி செயலாகச் செய்து தங்கமாக மாற்றுவது கருமசித்தியில் அடங்கும். அத்தகைய கருமசித்தியில் அடங்கும். அத்தகைய கருமசித்தியில் அடங்கியுள்ள பலகோடிகலைகளையும் (அதில் இரசவாதக் கலையும் அடங்கும்) அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தனக்கு அருளியதாக அகவலில் குறிப்பிட்டுள்ளார்.

கருமசித் திகளின் கலைபல கோடியும்
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி - அகவல் 242

இத்தகைய கருமசித்திக்காக இரசவாத செயலுக்காக வள்ளல் பெருமான் சென்னையிலிருந்து கருவிகள் வாங்கியதை கடித ஆதாரப் பூர்வமாக ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம்.

இரசவாதத்தை செயலாய் செய்து முடிப்பது கருமசித்தியில் அடங்கும். அதேசமயம் நினைத்த விநாடியில் ஒரு உலோகத்தை அதைவிட உயர்ந்த உலோகமாக மாற்றுவது யோகசித்தியில் அடங்கும். அத்தகைய யோகசித்தியையும் தனக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளியதாக அகவலில் குறிப்பிட்டுள்ளார்.

'யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி' – அகவல் 244

இவ்வாறு நினைத்த விநாடியில் சாதாரண உலோகத்தைத் தங்கமாக்குவது, மணலைத் தங்கமாக்குவது போன்ற யோகசித்த செயல்களை வள்ளலார் செய்ததை பின்வரும் உண்மைச்சம்பவம் மூலமாக நாம் அறியலாம்.

நிகழ்வு – 2

வள்ளல் பெருமான் வடலூரில் தங்கியிருந்த சமயம் ஒருமுறை அந்த ஊரைச் சேர்;ந்த ஒரு செல்வந்தர் வள்ளர் பெருமானைத் தனிமையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அந்த நபர் செல்வந்தராக இல்லாமல் தனது செல்வம் அனைத்தையும் இழந்து பல ஊர்கள் சுற்றி அலைந்துவிட்டு மீண்டும் வடலூர் வந்திருந்தார். வள்ளல் பெருமானின் சக்தியை, சித்தாற்றலை உணர்ந்த அவர் வள்ளல் பெருமானை சந்திக்க வந்திருந்தார்.

அந்த நபர் தான் இரசவாதத்தில் தங்கம் செய்ய ஆசைகொண்டு தனது சொத்து முழுவதையும் இழந்துவிட்டதாகவும், பல ஊர்கள் சுற்றி பலபேரை சந்தித்தும் தங்கம் செய்வது சாத்தியப்படவில்லை எனவும், கைப்பொருள் முழுவதையும் இழந்து விட்டதாகவும் கூறிவிட்டு 

'இவ்வளவு சக்திபடைத்த நீங்கள் நிச்சயம் தங்கம் செய்யும் இரசவாத சித்தி பெற்றிருப்பீர்கள். எனவே தயவுசெய்து எனக்கு சொல்லித் தாருங்கள்' என்று கேட்க வள்ளலார் மறுத்துவிட்டார். அந்த நபரோ விடுவதாக இல்லை தொடர்ந்து நச்சரிக்கவே வள்ளல் பெருமான் நின்றிருந்த அந்த இடத்திலேயே குனிந்து மணலை ஒரு கைப்பிடி அள்ளி அந்த நபரின் கையினை விரிக்கச் சொல்லி மெல்ல கொட்டியிருக்கிறார்.
வள்ளல் பெருமான் தரையிலிருந்து அள்ளியபோது மணலாக இருந்தது அந்த நபரின் கையில் விழும்போது தங்கத்துகள்களாக விழுந்திருக்கின்றது. அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த அந்த நபர் 'ஐயா நான் நினைத்தது உண்மைதான் உங்களுக்கு அந்த இரசவாத சித்தி இருக்கிறது. தயவுசெய்து எனக்குக் கற்றுத்தாருங்கள்' என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அவருக்கு வள்ளல் பெருமான் சொன்ன தெளிவான பதில் ஒரு அற்புதமான வாக்கியமாகும் - அது

'இச்சையற்றோர்க்கே இது சித்திக்கும்' – என்பதுதான். இச்சையற்றோர்க்கே இது சித்திக்கும் என்று கூறிய வள்ளல் பெருமான், அந்த நபரைப் பார்;த்து 'போனது போகட்டும் இனி இதுபோன்ற செயலில் ஈடுபடாதீர்கள். இனிமேலாவது உழைத்து, ஏதேனும் தொழில் செய்து சம்பாதிக்கும் வழியினைப் பாருங்கள். இதுபோன்ற இரசவாத செயலில் ஈடுபட்டு எதையும் வீண் விரயம் செய்யாதீர்கள்' என்று உபதேசித்து அனுப்பியுள்ளார். அந்த நிகழ்ச்சி மூலம் வள்ளலார், மணலைத் தங்கமாக்கும் யோகசித்தி பெற்றிருந்தார் என்பது தெளிவாகிறது.

நிகழ்வு – 3

வடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மக்கள் வறுமையால் வாடியதைக் கண்டு வரந்திய வள்ளல் பெருமான் அம்மக்களுக்காக தருமசாலையை உருவாக்கினார். ஒரு சமயம் வள்ளல் பெருமானிடம் வந்த இரண்டு நபர்கள் தங்கள் குடும்பம் மிக ஏழ்மையில் உள்ளதாகவும் பிழைக்க ஏதேனும் வழிதாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது பரிவுகொண்ட வள்ளல்பெருமான் அவர்களுக்கு இரும்மை வெள்ளியாக்கும் முறையினை உபதேசம் செய்திருக்கிறார்.

சிலகாலம் கழித்து அந்த இருவரும் மீண்டும் வள்ளலாரிடம் வந்து ஐயா செலவு நிறைய உள்ளது இந்த வெள்ளியை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியவில்லை. எனவே இரும்பைத் தங்மாக்கும் முறையினை எங்களுக்கு சொல்லித்தாருங்கள் என்றனர். அவர்களின் பேராசையைக் கண்ட வள்ளலார் 'அதுவும் போகும் போங்கள்' என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டாராம். அதன்பின் அந்த இருவராளும் இரும்பை வெள்ளியாக்க முடியவில்லையாம். அந்த சக்தியை அவர்கள் இழந்துவிட்டார்களாம்.

இந்த நிகழ்வு மூலம் ஒரு சாதாரண உலோகத்தை வேறு ஒரு உயர்வான உலோகமாக மாற்றும் ஆற்றலை வள்ளலார் பெற்றிருந்தார் என்பதும், அந்;த ஆற்றலை விநாடியில் ஒருவருக்குக் கொடுக்கவும், திரும்பப் பெறவும் வள்ளலாரால் முடிந்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது.

இந்த நிகழ்வில் ஒவ்வொருவரும் நன்கு கவனித்து மனத்தில் பதிக்கவேண்டிய ஒன்று வள்ளல் பெருமான் கூறிய 'இச்சையற்றோர்க்கே இது சித்திக்கும்' என்ற வாக்கியம்தான். இது மனத்தில் பதிந்துவிட்டாhல், தேவையில்லாமல் எவரும் அலைந்து திரியவோ, பொருளை வீணே செலவு செய்யவோ மாட்டார்கள்.

உண்மையிலேயே இரசவாத சித்திபெற்றவர். அதனை மற்றவர்க்கு செய்து காட்டிய உயர்ந்தஞானி. எல்லா உயிர்களிடத்தும் அன்புள்ளம் கொண்டவருமான வள்ளல் பெருமானின் இந்த வாக்கினை மதித்து நடக்க வேண்டியது இரசவாத சித்திக்காக முயல்பவர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். மீறி நடப்பது அவரவர் விதியாகும்.

                          வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – அகவல் 280

சிவன் சொத்து குலநாசம் - எப்படி அபூர்வ சக்தி ரசமணி செய்முறை

சிவன் சொத்து குலநாசம் - எப்படி


சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதாவது சிவன் சொத்தினை அபகரித்து அனுபவிப்பவர்களது குலம் நாசமாகும் என்பது இதன் பொருளாகும். இது உலகில் பொதுவாழ்வில் சிவன்;கோவில் சொத்தினை அபகரித்து அனுபவிப்பார்களது குலத்தினை நாசம் செய்யும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இது சரிதான் என்றாலும், இந்தப் பழமொழியில் உள்ள மறைவான பொருள் வேறு ஒன்றும் உள்ளது.
சிவனார் வீரியம், சிவனார் விந்து என்ற பெயர்கள் பாதரசத்திற்கு உண்டு. அத்தகைய பாதரசத்தினை சிவனது சொத்தினை பயன்படுத்துபவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதே மறைபொருளாகும். அவர்களது குலம் எப்படி நாசமாகும் என்பதை இந்தப் கட்டுரையை முழுமையாகப் படிக்கும்போது உங்களுக்குப் புரியும்.

பாதரசத்தினை மருந்துக்கோ, இரசவாதத்திற்கோ பயன்படுத்தும் முன்பு அதன் தோஷங்களை நீக்குவதும், சட்டை எனப்படும் வேறு உலோகக் கலப்புக்களை நீக்குவதும் அவசியமாகும். பாதரசத்தில் எட்டுவகையான தோஷங்கள் உண்டு. அதேபோல் ஏழுவகையான சட்டைகள் உண்டு. இவற்றை முறைப்படி நீக்கிய பின்னரே இரசத்தினைப் பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் பலவித தீமைகளுக்கும், நோய்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். எட்டுவகையான தோஷங்கள், அவற்றினால் உண்டாகும் நோய்களையும் முதலில் காண்போம்.

எட்டுவிதமான தோஷங்கள்

1. உண்பீனம் - தாங்க இயலாத வயிற்றுநோயினைத் தரக்கூடிய தோஷமாகும் இது.

2. கௌடில்யம் - தலைசம்பந்தமான நோய்கள், தலைக்குத்தல், ஒற்றைத்தலைவலி, மண்டையிடி போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.

3. அனவர்த்தம் - மூளை சம்பந்தமான நோய்கள், பைத்தியம், மயக்கம், வாய்ப்பிதற்றல் போன்றவற்றை இந்த தோஷம் உருவாக்கும்.

4. சண்டத்வம் - சன்னியினால் உண்டாகக்கூடிய உடற்கோளாறுகளை இந்த தோஷம் உண்டாக்கும்.

5. பங்குத்வம் - பெருநோய் என்றழைக்கப்படும் குஷ்டம் மற்றும் தீராத தாகம் போன்ற நோய்களை இந்த தோஷம் ஏற்படுத்தும்.

6. சங்கரம் - பயம் படபடப்பு இவைகளை உண்டாக்கி மனபாதிப்புகளை உண்டாக்குதல் மற்றும் உடலிலுள்ள ஏழுவித தாதுக்களையும் பலமிழக்கச் செய்தல், வீரியத்தின் தன்மையை வீணாக்குதல் போன்றவற்றை இந்த தோஷம் செய்துவிடும். ஏழுவித தாதுக்குறைபாடும், வீரியத்தின் குறைபாடும் அவரது வாரிசு – வம்ச வளர்ச்சியை பாதிக்கும். அல்லது வாரிசு இல்லாத மலட்டுத்தன்மையை உருவாக்கிவிடும். இதைத்தான் பெரியோர் மறைமுகமாக சிவன் சொத்து குலநாசம் (வாரிசு நாசம்) என்று கூறினார்கள்.

7. சமலத்வம் - பலவித சுரங்கள், கிறுகிறுப்பு போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.

8. சவிவிஷத்வம் - உடல் நடுக்கம், உடல் இளைத்தல், இரைப்பு நோய் போன்றவற்றை இந்த தோஷம் ஏற்படுத்தும்.

ஏழுவிதமான சட்டைகள்

1. நாகம் - நாகம் எனும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன்படுத்தும்போது அது மூலநோயை உண்டாக்கிவிடும்.

2. வங்கம் - வங்க சட்டை கழற்றாத இரசம் பெருநோய் எனும் குஷ்ட நோயை ஏற்படுத்தும்.

3. அக்கினி – அக்கின சட்டை கழற்றப்படாத இரசம் உடலில் தோல்நோயை உண்டுபண்ணும்.

4. மலம் - மலம் என்னும் சட்டை கழற்றப்படாத பாதரசத்தைப் பயன்படுத்துமபோது அறிவாற்றல் பாதிப்பு ஞாபகமறதி எனும் நினைவாற்றல் குறைபாடு உருவாகும்.

5. விடம் - விடம் என்ற சட்டை கழற்றப் பெறாத பாதரசத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த இரசம் மரணத்தை உண்டுபண்ணிவிடும்.

6. கிரி – கிரிசட்டை கழற்றாத ரசம் சாட்டியத்தை உண்டாக்கும்.

7. சபலம் - சபலச்சட்டை கழற்றப்படாத இரசம் உடலின் வீரியத்தில் குறைபாட்டை உண்டாக்கும்.

இந்த குறைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும். அதுமட்டுமல்லாமல் மணியைத் தயாரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். முறைப்படி சுத்தி செய்யாத இரசத்தை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் முன்கண்ட பாதிப்புகள் சிறதுசிறிதாக உடலில், மனத்தில் ஏற்பட்டு மெல்லமெல்ல வளர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பெரிய அளவில் பாதித்துவிடும். எனவே இரசத்தைக்கொண்டு இரசவாதம் செய்ய நினைப்பவர்கள் சரியான குருவிடம் நேர்முகமாக இருந்து முறையாகப் பயின்று இரசவாதத்தில் ஈடுபடவேண்டும்.

எட்டுவகையான தோஷங்களும், ஏழுவகையான சட்டைகளும் சரியானபடி நீக்கப்படாவிட்டால் என்னென்ன விதமான நோய்களை உண்டாக்குமென பார்த்தீர்கள். அவற்றில் ஒருசில நோய்களுக்கு ஒருவர் ஆட்பட்டாலே அவர் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக ஆகிவிடும். அதனால்தான் சிவன்சொத்து குலநாசம் என்று சொல்லப்பட்டது. இதனை முழுமையாக அறியாமல் சிலர் இரசமணி பயிற்சி, இரசவாத பயிற்சி என நடத்தி தான் பெற்ற அறைகுறை அறிவை அதில் மேலும் அறைகுறையாகச் சொல்லித்தந்து 

'குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழு மாறே' – என்ற சித்தர் வாக்குப்படி வீணாகிக் கொண்டுள்ளனர். (மற்றவர்களையும் வீணாக்கிக் கொண்டுள்ளனர்).

தன்னிடம் பயிற்சிக்கு வருபவர்கள் மூலமாக தாங்கள் பயிற்சி எடுத்துக் (கற்றுக்) கொள்கிறார்கள். இரசவாதத்தில் ஈடுபட நினைப்பவர்கள் அதன் அவசியத்தை முதலில் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். அத்துடன் மேற்கண்ட நொய் சம்பந்தமான எச்சரிக்கை வழிமுறைகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக ஒழுக்கமான, உண்மையான குருவைத் தேர்ந்தெடுப்பதில் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். வெறும் வாய் வார்த்தைகளை நம்பாமல் செயல்பாட்டில் உண்மை, ஒழுக்கம் உள்ளதா என கவனித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பெரியோர் சொன்ன சிவன் சொத்து குலநாசம் என்ற வாக்குப் பலித்துவிடும்.