gold லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
gold லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

தங்கம் வாங்க காலப்பிரகாசிகை சொல்லும் நல்ல நேரம்


தங்கம் வாங்குவதற்குகந்த காலம்

குரு வர்கோத்தமம் பெற்றிருக்க புதனும், சுக்ரனும் கேந்திரத்திலிருக்கும்படியான லக்னத்தில் தங்கத்தை வாங்கிச் சேர்த்தால் ஒன்று கோடி மடங்காக வளர்ச்சியுறும்.
இதுபோலவே சந்திரன் தன் உச்ச அம்சமான லக்னத்தில் இருக்க, அதற்கு ஏழாமிடத்தில் குருவும் இருக்க செல்வங்களைச் சேமித்தால் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், ஆபரணங்கள் முதலானவை ஒன்றுக்குப் பலமடங்காகப் பெருகும்.
தங்கம், தான்யங்கள், ரத்னம் இவைகளைச் சேமிக்கும் விஷயத்திலும், சம்பாதிக்கும் விஷயத்திலும் லக்னத்தில் குரு இருந்தால் மேன்மேலும் விருத்தியாகும்.
லக்னத்தில் குருவும், இரண்டாமிடத்தில் சுக்ரனும், பத்தாமிடத்தில் சந்திரனும், பதினொன்றாம் இடத்தில் புதனும் இருந்து, அப்படிப்பட்ட நேரத்தில் செல்வத்தினைச் சேமிப்பது நல்லது. குறைவற்றிருக்கும்.
வியாழக்கிழமை தினம், லக்னத்தில் குருவும், 11ல் சூர்யனும், 6ல் சனியும் இருந்தால் அதுசமயம் பணியாட்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். பொருள்களையும் சேமிக்கவேண்டும்.
லக்னத்தில் சுக்ரனும், 10ம் இடத்தில் குருவும், சந்திரனும் இருக்க, ஈயம், பித்தளை, வெண்கலம் ஆகியவற்றை வாங்கிச் சேமித்தால் ஒன்று கோடி (பல) மடங்காகும்.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

கஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;இரசவாதம்வியப்பான தகவல்கள்


கஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;


சேலம் மாநகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை எனப்படும் சித்தர் கோயிலாகும். இதனை அமாவாசைக் கோயில் என்றும் கூறுவர். காலங்கிநாதர் எனும் சித்தர் அமர்ந்த நிலையில் மூலவராக உள்ள அற்புதத் திருக்கோயிலாகும். இக்கோயிலின் கல் கட்டடம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும். கௌ-லன்-கீ என்ற சீனதேசத்து யோகியே கஞ்சமலை வந்து தங்கி காலங்கி ஆனார் என்று கூறுவர். எங்களுக்காக சீனாவிலிருந்து வந்த இங்கே சித்தர் தங்கிவிட்டார் என்று அப்பகுதி மக்கள் இன்றளவும் கூறிவருவதைக் கேட்கலாம். கஞ்சமலையின் மேல் மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இன்றும் சித்தர்களின் பொருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மேல்மலைக்குச் சென்று முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சமலையின் பெயர் காரணம் சற்று கவனிக்கத் தக்கதாகும். கஞ்சம் என்பது தங்கம், இரும்பு, தாமரை எனும் மூன்றுவித பொருள் கொண்டதாகும். தாமரையில் உதித்த கஞ்சன் எனும் பிரமன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை எனும் பெயர் பெற்றது எனலாம்.

மலை முழுவதும் இரும்புத்தாது மிக உயர்ந்தரகத்தில் நிறைந்துள்ளது. அதனால் கஞ்சமலை எனப் பெயர் பெற்றது எனலாம்.
இவை அனைத்திற்கும் மேலாக வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய ஒரு உண்மை என்னவென்றால் இம்மலையில் தங்கம் கிடைத்தது என்பதுதான். கஞ்சமலையிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைப் பயன்படுத்தித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு (பராந்தக சோழனால்) பொன் கூரை வேயப்பட்டது.

அக்காலத்தில் கொங்கு நாடு என்பது கஞ்சமலையினை மையமாக வைத்து கிழக்கே மதிற்கோட்டைக் கரையையும், மேற்கே வெள்ளியங்கிரியையும், வடக்கே பெரும்பாலையையும், தெற்கே பழநியையும் எல்லைகளாகக் கொண்ட கொங்குமண்டலமாகும்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை, இராசிபுரம், குமாரபாளையம், அயோத்தியாபட்டணம் என எழுபத்தெட்டு நாடுகள் இதில் அடங்கும்.

பற்றறுத்தாளும் பரமன் ஆனந்தம் பயில்நடனஞ்செய்
சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் ஆகச் செய்ச்செறும்பொன்
முற்றிலுந் தன்னகத்தேவிளை வாவதை மொய்ம்பிறையுள்
மற்றும் புகழக்கொடுத்த தன்றோ கொங்கு மண்டலமே.

(கொங்கு மண்டலச்சதகம் - கார்மேகக்கவிஞர்)

இப்பாடல் மூலம் கஞ்சமலையில் தங்கம் கிடைத்தது உறுதியாகிறது. அதுமட்டுமன்றி மலையிலிருந்து ஒடிவரும் நீரில் ஆற்றில் பொன் (பொன் தாது) கிடைத்ததால் அதனைப் பொன்நதி பொன்னிநதி என்று அழைக்கின்றனர். அந்நதியில் பொன் எடுத்தவர்கள் சமீபகாலம் வரை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தங்கம் மட்டுமல்லாது கருமையான கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கருஊமத்தை, கருந்துளசி என பல்வேறு காயகல்ப மூலிகைகள் உள்ளன. கஞ்சமலைக் காட்டினைக் கருங்காடு என்றும் கூறுவர். அதியமான் அவ்வைக்குத்தந்த கருநெல்லிக்கனி கஞ்சமலையில் விளைந்த கருநெல்லிக்கனியே ஆகும்.
கஞ்சமலையில் தங்கத்தாது கிடைத்துள்ளது. அம்மலையில் சித்தர்கள் இரசவாதம் செய்துள்ளனர். சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தங்கம் வேண்டுவோர் முழு நம்பிக்கையுடன் கஞ்சமலை சித்தரை வேண்டினால் கைதேர்ந்த இரசவாதியாகிய சித்தர் அருளால் தேவையான அளவு தங்கம் பெறலாம்.

சித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம்




சித்தர் திருமூலர் அவர்கள் தான் எழுதிய திருமந்திரத்தில் செம்பினைப் பொன்னாக்கும் வழிமுறையினை எளிதாக, தெளிவாக எழுதியுள்ளார்.
திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் 903ஆம் பாடலைக் காண்போம்.
        செம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச் 
செம்புபொன் னான திருவம் பலமே.
இப்பாடலில் திருமூலர் சிவாயநம என்று செபிக்க செம்பு பொன்னாகும் என்று சொல்கிறார். அதாவது சிவாயநம என்று சிவ சிந்தனையில் இருப்பவர்களால் செம்பினைத்தங்கமாக மாற்ற இயலும் என்கிறார். இறைசிந்தனை தவிர மனத்தில் வேறெதுவும் இல்லாமல் சிவசிந்தனையில் சிவாயநம சிவாயநம என சிந்தித்து இருப்பவர்கள் செம்பை பொன்னாக்க முடியும் என்கிறார்.

இங்கே செம்பு பொன்னாகுதல் என்றால் என்ன என்பதையும் சற்று சிந்திப்போம். செம்பு என்பது களிம்பு உண்டாகும் உலோகமாகும். களிம்பு உருவாகாத அளவுக்கு செம்பினை சுத்திப்படுத்திவிட்டால் அது தங்கமாக ஆகிவிடும்.

இப்பாடலில் வெளிப்படையாக செம்பைப் பொன்னாக்குதல் என்னும் (உலோக) இரசவாதம் தெரிகிறது. அதே சமயம் இப்பாடலில் மறைபொருளாக உள்ள ஓர் உயரிய இரகசியம் என்னவென்றால் செம்புபோல களிம்பேறி நோய்நொடிக்கு உள்ளாகி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிடும் உடம்பினை தங்கமாக்கி, இறவா நிலைக்கு, பேரின்ப நிலைக்கு உயர்த்துவது சிவாயநம எனும் சிவ பஞ்சாட்சரமே என்பதாகும். இது உடலின் இரசவாதம், உயிரின் இரசவாதமாகும்.

905 ஆம் பாடலிலும் இதனை மீண்டும் வலியுறுத்தி எழுதுகிறார்.
வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.
சிவாயநம என செபித்துவர பிறப்பில்லை. சிவனின் நடனத்தைக் (தரிசனத்தைக்) காணலாம். செம்புநிலையிலுள்ள உயிரானது குற்றங்கள் நீங்கி தங்கத்தின் நிலைக்கு உயரும் என்று எழுதுகிறார்.

அதாவது செம்பினைப் பொன்னாக்கினால் அதனால் என்ன பயன் ஒருவர்க்கு உண்டாகுமோ அத்தகைய பயனைப் பெற சிவாயநம என ஓதுவது போதுமானதாகும். அவ்வாறு தினமும் சிவசிந்தனையிலிருந்து சிவாயநம என ஓதி வந்தால் நிச்சயம் பொன்கிடைக்கும். பொன்னுக்கு நிகரான நன்மைகள் உங்களைவ வந்து சேரும். உங்கள் உடலும் பொன் உடம்பென ஆரோக்கியமான, பலமான உடலாக மாறும். உடலின் குற்றங்கள் நீங்கி நலம்பெறும்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

எம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்படி..?

எம்.ஜி.ஆர் தங்ட்க பஸ்பம் சாப்பிடுறார்..அதனால்தான் இப்படி சிவப்பா இளமையா இருக்குறார் என அக்காலத்தில் ஒரு நம்பிக்கை கிராமத்து மக்களிடம் உண்டு...எல்லாம் உடன்பிறப்பு பேச்சாளர்கள் கிளப்பிவிடும் வதந்திதான்...அவர் சாப்பிட்டது உண்மையா பொய்யா தெரியாது..ஆனால் இன்றளவும் தங்கப்பஸ்பம் என்றாலே நினைவுக்கு வருகிறவர் எம்.ஜி.ஆர் தான்..!!

அதனால் தங்கப் பஸ்பம் என்றாலே அக்காலத்தில் வயாகாரா போல பெரிய பிரபலம்...மதிப்பும் அதிகம்..


தங்கபற்பம் வாங்க வாய்ப்பில்லாதவர்கள் கீழ்கண்ட முறையினைச் செய்து நல்லபலனைப் பெறலாம். தங்கம் பற்பமாக ஆக்கப்படும்போது முறைப்படி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த பற்பத்தை சீரணிக்க முடியாமல் உடல் உள்உறுப்புகள் (கல்லீரல், சிறு நீரகங்கள்) பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. ஆனால் கீழ்க்கண்ட முறையில் அப்படிப்பட்ட பிரச்சனை நடக்க வாய்ப்பே இல்லை.

உங்கள் வசதிக்கு ஏற்ப 10 கிராம், 5 கிராம், 1 கிராம் என ஏதேனும் ஒரு எடை அளவில் தங்கக்காசு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 2 குவளை தண்ணீர் ஊற்றி அதில் தங்கக்காசினை இட்டு அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீரானது பாதியளவு ஆகும்வரை நன்றாக காய்ச்சுங்கள். (புதிய தங்கக் காசினைப் பயன்படுத்தும் போது முதன்முதலாகக் காயச்சும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம். அதனை ஊற்றிவிட்டு மறுமுறை அதேபோல் 2 குவளை நீரை ஊற்றி தங்கக் காசினை இட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

இவ்வாறு கிடைத்த காய்ச்சியநீர் தங்கச் சத்து நிறைந்த தண்ணீர் ஆகும். தினமும் காலை, இரவு என இரண்டு வேளை இதுபோல தங்கநீரைத் தயாரித்து குடித்துவர உடல் நல்ல ஆரோக்கியம் பெறும். பெரியவர்கள், சிறியவர்கள் என எவர் வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தலாம்.

 இவ்வாறு பயன்படுத்தவதால் தங்கக்காசு உருவத்திலோ, உடை அளவிலோ சிறிதும் மாறுபடாது. எனவே தைரியமாகப் பயன்படுத்தலாம். புதிதாக தங்கக்காசு வாங்க எண்ணமில்லாதவர்கள் தாங்கள் அணிந்துள்ள தங்க மோதிரம், தங்கச்சங்கிலி, தங்கவளையல் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் நகைகள் கற்கள் ஏதுமில்லாத நகையாக இருப்பது அவசியமாகும். அவ்வாறு நகையினைப் பயன்படுத்தும் முன்பு நன்றாக சுத்தமாகக் கழுவிவிட்டு தண்ணீரில் இட்டு காய்ச்சி பயன்படுத்த வேண்டும்.

உடலில் தங்கநகைகள் அணிவது என்பதே இதுபோன்ற சிகிச்சைப்பலனைப் பெற ஆரம்பிக்கப்பட்டதுதான். தங்கம் உடலில் பட்டபடி இருப்பது தங்கத்தின் ஆற்றல் உடலுக்குள் எந்நேரமும் சென்றுகொண்டிருக்க வழிவகுக்கும். அதற்காகத்தான் அக்காலத்தில் தங்கநகைகளை மக்கள் அணிந்தனர். பிற்காலத்தில் அந்த நகைகள் ஒரு அலங்காரப் பொருளாகவும், கௌரவத்தைக் கொடுப்பதாகவும், வசதி செல்வாக்கைப் பிரதிபலிப்பதாகவும் மாறிவிட்டது.

அக்காலத்தில் அரசர், அரசியர் தலை, கழுத்து, தோள்கள், மார்பு, இடுப்பு, கைகள், கால்கள் என பல பகுதிகளில் தங்கத்தை அணிந்தது செல்வச்செழிப்பை வெளிப்படுத்த அல்ல. முக்கியமாக உடல் ஆரோக்கியத்தை முன்னிட்டே ஆகும்.

மன்னர் மட்டுமல்லாது மக்களும் இதனை முடிந்தவரை பயன்படுத்திவந்தனர். நாளாக நாளாக தங்கத்தின் விலை அதிகமாக அதிகமாக அதன் பயன்பாடு குறைந்துகொண்டு வருகிறது. அவரவர் சக்திக்குத் தக்கபடி சிறிதளவு வாங்கி அணிகின்றனர்.

நகை அணியாவிட்டாலும், தங்கபற்பம் சாப்பிடாவிட்டாலும் முன்னர் நான் குறிப்பிட்டபடி தங்கநீரைத் தினமும் தயாரித்து சாப்பிட நல்ல ஆரோக்கியம் நிச்சயம் கிடைக்கும். இது செலவே இல்லாத முறை என்பதால் எவரும் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இவ்வாறு காய்ச்சிய தண்ணீரைக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எவரம் அருந்தலாம். 2 மாதக்குழந்தைவரை 2 தேக்கரண்டியும், 2 வயத வரை கால் டம்ளர் அளவும், 5 வயது வரை ½ டம்ளர் அளவும், பத்து வயதுவரை ஒரு டம்ளர் அளவும் பத்துவயதக்கு மேற்பட்டவர்கள் இரண்டு டம்ளர் அளவும் குடிக்கலாம். இந்த சிகிச்சை முறை எந்தவித பக்கவிளைவோ, பின்விளைவோ இல்லாதது என்பதால் தாராளமாக அனைவரும் பயன்படுத்தலாம