கஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;
சேலம் மாநகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை எனப்படும் சித்தர் கோயிலாகும். இதனை அமாவாசைக் கோயில் என்றும் கூறுவர். காலங்கிநாதர் எனும் சித்தர் அமர்ந்த நிலையில் மூலவராக உள்ள அற்புதத் திருக்கோயிலாகும். இக்கோயிலின் கல் கட்டடம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும். கௌ-லன்-கீ என்ற சீனதேசத்து யோகியே கஞ்சமலை வந்து தங்கி காலங்கி ஆனார் என்று கூறுவர். எங்களுக்காக சீனாவிலிருந்து வந்த இங்கே சித்தர் தங்கிவிட்டார் என்று அப்பகுதி மக்கள் இன்றளவும் கூறிவருவதைக் கேட்கலாம். கஞ்சமலையின் மேல் மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இன்றும் சித்தர்களின் பொருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மேல்மலைக்குச் சென்று முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கஞ்சமலையின் பெயர் காரணம் சற்று கவனிக்கத் தக்கதாகும். கஞ்சம் என்பது தங்கம், இரும்பு, தாமரை எனும் மூன்றுவித பொருள் கொண்டதாகும். தாமரையில் உதித்த கஞ்சன் எனும் பிரமன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை எனும் பெயர் பெற்றது எனலாம்.
மலை முழுவதும் இரும்புத்தாது மிக உயர்ந்தரகத்தில் நிறைந்துள்ளது. அதனால் கஞ்சமலை எனப் பெயர் பெற்றது எனலாம்.
இவை அனைத்திற்கும் மேலாக வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய ஒரு உண்மை என்னவென்றால் இம்மலையில் தங்கம் கிடைத்தது என்பதுதான். கஞ்சமலையிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைப் பயன்படுத்தித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு (பராந்தக சோழனால்) பொன் கூரை வேயப்பட்டது.
அக்காலத்தில் கொங்கு நாடு என்பது கஞ்சமலையினை மையமாக வைத்து கிழக்கே மதிற்கோட்டைக் கரையையும், மேற்கே வெள்ளியங்கிரியையும், வடக்கே பெரும்பாலையையும், தெற்கே பழநியையும் எல்லைகளாகக் கொண்ட கொங்குமண்டலமாகும்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, இராசிபுரம், குமாரபாளையம், அயோத்தியாபட்டணம் என எழுபத்தெட்டு நாடுகள் இதில் அடங்கும்.
பற்றறுத்தாளும் பரமன் ஆனந்தம் பயில்நடனஞ்செய்
சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் ஆகச் செய்ச்செறும்பொன்
முற்றிலுந் தன்னகத்தேவிளை வாவதை மொய்ம்பிறையுள்
மற்றும் புகழக்கொடுத்த தன்றோ கொங்கு மண்டலமே.
(கொங்கு மண்டலச்சதகம் - கார்மேகக்கவிஞர்)
இப்பாடல் மூலம் கஞ்சமலையில் தங்கம் கிடைத்தது உறுதியாகிறது. அதுமட்டுமன்றி மலையிலிருந்து ஒடிவரும் நீரில் ஆற்றில் பொன் (பொன் தாது) கிடைத்ததால் அதனைப் பொன்நதி பொன்னிநதி என்று அழைக்கின்றனர். அந்நதியில் பொன் எடுத்தவர்கள் சமீபகாலம் வரை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தங்கம் மட்டுமல்லாது கருமையான கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கருஊமத்தை, கருந்துளசி என பல்வேறு காயகல்ப மூலிகைகள் உள்ளன. கஞ்சமலைக் காட்டினைக் கருங்காடு என்றும் கூறுவர். அதியமான் அவ்வைக்குத்தந்த கருநெல்லிக்கனி கஞ்சமலையில் விளைந்த கருநெல்லிக்கனியே ஆகும்.
கஞ்சமலையில் தங்கத்தாது கிடைத்துள்ளது. அம்மலையில் சித்தர்கள் இரசவாதம் செய்துள்ளனர். சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தங்கம் வேண்டுவோர் முழு நம்பிக்கையுடன் கஞ்சமலை சித்தரை வேண்டினால் கைதேர்ந்த இரசவாதியாகிய சித்தர் அருளால் தேவையான அளவு தங்கம் பெறலாம்.
2 கருத்துகள்:
இதுவரை அறியப்படாத அருமையான தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .தொடர வாழ்த்துக்கள் .
அருமை
கருத்துரையிடுக